குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
லாலாேபட்டை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியல்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மகாதானபுரம் ஊராட்சி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஊராட்சியில் சில இடங்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லையாம். இதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் லாலாபேட்டை அருகே உள்ள மேட்டுமகாதானபுரம்- பழைய ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் கைவிட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.