குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

திடீர் மறியல்

ஆவுடையார்கோவில் தாலுகா நானாக்குடி கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்ததால் அப்பகுதி மக்களுக்கு கடந்த ஒருவாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆழ்துளை கிணறுக்கு வரும் மின்சார ஒயர்களை சமூக விரோதிகள் அறுத்து விடுவதால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் அறந்தாங்கி-ஆவுடையார்கோவில் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனறு அவர்கள் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story