தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தர வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம்:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தரவேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ேகட்டுக் கொண்டுள்ளார்.
சாதனை விளக்க கூட்டம்
ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவன் கோவில் முன்பு நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரித்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்்.
பெண்களுக்கு சேமிப்பு
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.4 ஆயிரம் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். அவர், பெண்கள் மீது அக்கறை கொண்டவராக திகழ்கிறார். தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டத்தை நிறைவேற்றிதந்தார். இதன் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,500 சேமிப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன், மகளிர் சுய உதவி கடன் மற்றும் நகை கடனை தள்ளுபடி செய்துள்ளார்.
பலலட்சம் மக்கள் பயன்
அரசு பள்ளிகளில் பள்ளிக்கட்டிடம் 20 ஆண்டுகளில் சேதம் அடைந்திருந்தால், அவற்றை சீரமைக்க அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் மூலம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவ பார்க்கும் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்ட மூலம் சாலைகளில் விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை அந்த வழியாக செல்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பட்சத்தில் 48 மணி நேரம் சிகிச்சைக்கு அனைத்து செலவையும் அரசே ஏற்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் அரசு வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ெசயல்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தமிழகத்தில் 5 லட்சம் கோடி கடன் சுமையே கொடுத்துவிட்டு சென்றனர். அந்த கடன் சுமையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மக்கள் நலனுக்கான திட்டங்களை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தால், அவர் அப்படியே வைத்துள்ளார். அப்படி ஒரு கவர்னர் நமக்கு தேவையா? என்று மக்கள் சிந்திக்கும் அளவிற்கு அவரது செயல்பாடு இருக்கிறது. சாதியையும், மதத்தையும் பிளவுபடுத்தி பார்க்கும் ஆட்சியாக மத்திய பா.ஜனதா ஆட்சி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க. அரசுக்கு முழு ஆதரவை தர வேண்டும், என்றார்.