வைக்கல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வைக்கல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தில் 2 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி வைக்கல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் சப்-கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழுதேசம் அருகே வைக்கல்லூர் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தீவு போல் காட்சி அளிக்கும் இந்த கிராமத்தில் மழை நேரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

இந்த பலத்த மழையின்போது ஆற்று வெள்ளத்தில் ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து கரையோர பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கரையோர பகுதியில் பாறைகற்கள் கொட்டப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றில் கரையோரத்தில் இருந்த புருஷோத்தமன், சுனில் என 2 பேரின் வீடுகள் முழுமையாக அடித்து செல்லப்பட்டது. அதன் அருகில் உள்ள மற்றொரு வீடும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று வைக்கல்லூர் பகுதி மக்கள் ஏழுதேசம் 'ஏ' கிராம அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். அப்போது வெள்ளத்தால் வீடுகளை இழந்த 2 பேருக்கும் அரசு மாற்று இடம் வழங்குவதுடன் வீடு கட்டி ெகாடுக்க வேண்டும், கிராமத்தில் மீதி இருக்கும் வீடுகள் மற்றும் பட்டா நிலங்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

இதை தொடர்ந்து பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், நகராட்சி நிர்வாகத்திடம் பேசி வீடுகளை இழந்த 2 பேருக்கும் அதே கிராமத்தில் நிலங்களை பட்டா போட்டு கொடுக்கவும், அந்த இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வீடுகளை கட்டி கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மீதி இருக்கும் நிலங்கள், குடியிருப்புகளை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15 லட்சமும், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், கொல்லங்கோடு நகராட்சி நிர்வாகம் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.35 லட்சத்தில் உடனடியாக கரையோர பகுதியில் தடுப்புச்சுவர் பணி தொடங்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் நடத்தி முடிக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story