டீசல் கேன், தூக்கு கயிறுடன் திரண்ட பொதுமக்கள், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு


டீசல் கேன், தூக்கு கயிறுடன் திரண்ட பொதுமக்கள், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
x

நெல்லை சந்திப்பில் டீசல் கேன், தூக்கு கயிறுடன் திரண்ட பொதுமக்கள், தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அண்ணா நகர், புளியந்தோப்பு பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் புயல், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, இங்குள்ள மக்களை ரெட்டியார்பட்டியில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக 130 பேருக்கு மாற்று வீடு வழங்கி விட்டு, அவர்கள் தற்போது வசித்து வரும் வீடுகளை இடித்து அகற்ற ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் ரெட்டியார்பட்டி வீடுகளை பார்ப்பதற்காக, மீனாட்சிபுரம் மக்களை அழைத்து செல்ல நேற்று அதிகாரிகள் 3 வேன்களில் அந்த பகுதிக்கு வந்தனர். ஆனால் அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென்று டீசல் கேன், தூக்கு கயிறு மற்றும் எறும்பு பொடி ஆகியவற்றை எடுத்து திரண்டு வந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர்..

தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து டீசல் கேன், தூக்கு கயிறு, எறும்பு பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது கவுன்சிலர் சுப்பிரமணியன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அங்குள்ள மக்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "நாங்கள் நதி புறம்போக்கு நிலத்தில் வசிக்கவில்லை. நத்தம் நிலத்தில் வசித்து வருகிறோம். ஆனால் தேவையில்லாமல் எங்களை காலி செய்து, வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். நாங்கள் இங்கிருந்து காலி செய்ய மாட்டோம்'' என்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story