சாலை மறியலுக்கு திரண்ட பொதுமக்கள்


சாலை மறியலுக்கு திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:30 AM IST (Updated: 3 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே பொதுமக்கள் சாலை மறியலுக்கு திரண்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் பாப்பான்குளம் பஞ்சாயத்தில் பெரிய தெருவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டன. இதன் அருகில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் வழிப்பாதை உண்டு என சமுதாய நலக்கூட பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஊர் பொதுமக்கள் நெல்லை-கடையம் சாலையில் மறியல் செய்யப் போவதாக திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி பிரபா தலைமையில் ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்னலட்சுமி, மகாலிங்கம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த கடையம் யூனியன் ஆணையாளர் ராஜசேகர், ஆழ்வார்குறிச்சி வருவாய் அலுவலர் வெங்கடேஸ்வரன், நில அளவையாளர் வீரய்யர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அந்த பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை அளந்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அதிகாரிகள் நிலத்தை அளந்தனர். இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) தென்காசி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே அந்த வழியாக வந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் சாலையில் திரண்டிருந்த மக்கள் முறையிட்டனர். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளை வரவழைத்து இருதரப்பும் சுமுகமாக தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்.


Next Story