திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி நீட்டிக்கப்பட்டது.
அதன்படி 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. மேலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் 14-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கப்பட உள்ளது.
தூய்மை பணி
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் தூய்மை செய்து தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
பள்ளிகள் திறக்கும் முதல் நாளன்றே மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அந்தந்த பள்ளிகளுக்க தேவையான எண்ணிக்கையில் பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் கூட்டம்
மேலும் கோடை விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கு உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலாவிற்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்றவர்கள் தங்கள் வீடு திரும்பி நாளை முதல் பள்ளிகளுக்கு செல்ல தயார் நிலையை உள்ளனர்.
இதனால் இன்று திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம் பிடிக்க தங்கள் குழந்தைகளுடன் ஓடி, ஓடி சென்று இடம் பிடித்தனர்.
இதன் காரணமாக பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.