மகளிர் உரிமைத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்


மகளிர் உரிமைத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்
x

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு நேற்று ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் ஏராளமான பெண்கள் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பார்வதிபுரம், பரமார்த்தலிங்கபுரம், கட்டையன்விளை போன்ற பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த 93 பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கப்பெறவில்லை. எனவே அந்த 93 பேருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தோவாளை சுப்பிரமணியபுரம் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் விசுவ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன், மாவட்ட நிர்வாகி கார்த்திக், மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சொக்கலிங்கம், மகாராஜன் உள்ளிட்டோருடன் வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் இந்த பகுதியில் சுமார் 60 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 65 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பஞ்சாயத்துக்கு வீட்டு வரியும் செலுத்தி வருகிறோம். மேலும் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் பெற்று அதற்கு கட்டணமும், வரியும் செலுத்தி வருகிறோம். நாங்கள் அனைவருமே தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனவே நாங்கள் குடியிருக்கும் இந்த இடத்தை எங்கள் பெயருக்கு பட்டா வழங்கி வாழ வழிவகை செய்ய வேண்டும். இந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்பதற்கான ஆவணங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை தலைவர் சுப்பிரமணியபிள்ளை, பொதுச்செயலாளர் கணேசன், கண்காணிப்பு குழு உறுப்பினர் லெட்சுமணன் உள்பட பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும், வீடு கட்ட மானியம் பெற எளிய நடைமுறை வேண்டும், 18 நலவாரியங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கல்குளம் தாலுகா ரீத்தாபுரம் பகுதியில் செயல்படும் பிளாஸ்டிக் நிறுவனத்தினால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, மக்கள் குடிக்கும் குடிநீரில் காப்பர் கலவை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக சுகாதாரத்தை மேம்படுத்திட, சுற்றுச்சூழலை பாதுகாத்திட அந்த நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story