தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்: சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
மிலாது நபி, காந்தி ஜெயந்தி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறை வந்ததால், சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் சிலர் அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும், தங்களது சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை முடிவடைந்ததையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் தங்களது வாகனங்களில் நேற்று சென்னைக்கு திரும்பி வர தொடங்கினர்.
இதுமட்டுமின்றி காலாண்டு விடுமுறை முடிந்து இன்று(செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுவதால், விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்களும் தனியார், அரசு பஸ்கள் மற்றும் கார்களில் நேற்று சென்னைக்கு புறப்பட்டனர்.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
ஒரே நாளில் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வந்ததால், உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடியே சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சுங்கச்சாவடியில் கூடுதலாக வழித்தடங்களை திறந்து விட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.