திருவாரூர், மன்னார்குடி சாலைகளை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா?- பொதுமக்கள்


திருவாரூர், மன்னார்குடி சாலைகளை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா?- பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Jun 2023 7:15 PM GMT (Updated: 12 Jun 2023 7:15 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருவாரூர், மன்னார்குடி சாலைகளை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருவாரூர், மன்னார்குடி சாலைகளை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதியில் விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் திருத்துறைப்பூண்டி நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய இடங்களில் இருந்து உப்பு, காய்கறிகள், பூ வகைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தஞ்சை, திருச்சி, மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு இந்த ரெயில்வே கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

சுற்றுப்பாதை

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களும் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் பகுதி வழியாக அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன.

திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் வாகனங்கள் வேறு பாதையில் செல்ல வேண்டும் என்றால் திருவாரூர் சாலையில் பல கிலோமீட்டர் தூரம் சென்று மணலி, குரும்பல் வழியாக விளக்குடி சென்று அங்கிருந்து மன்னார்குடி சாலையில் செல்ல வேண்டி உள்ளது. இது பல கிலோ மீட்டர் சுற்றுப்பாதையாகும்.

புறவழிச்சாலை

திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு புறவழிச் சாலை உள்ளது. அதேபோல வேதாரண்யம் செல்வதற்கும் புறவழிச்சாலை உள்ளது. நாகப்பட்டினம் செல்லவும் புறவழிச்சாலை உள்ளது. தற்போது நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு விரைவில் அந்த சாலை திறக்கப்பட உள்ளது.

பட்டுக்கோட்டை, வேதாரண்யம், நாகை செல்ல புறவழிச்சாலை உள்ளது போல திருவாரூர் சாலையில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலை, மன்னார்குடி சாலையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் வகையில் புறவழிச் சாலைகள் அமைத்து, திருத்துறைப்பூண்டி நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டமன்ற குழுவுக்கு மனு

இதுதொடர்பாக சட்டமன்ற குழுவுக்கு திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில்குமார் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். வருகிற 20-ந் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு சட்டமன்ற குழு வருகை தர உள்ள நிலையில் இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- திருவாரூர் சாலையில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையை இணைக்க வேண்டும். மன்னார்குடி சாலையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையை புறவழிச் சாலையாக மாற்ற வேண்டும். மேலும் திருத்துறைப்பூண்டி நகரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும். திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக இந்த புறவழிச்சாலை பணிகளை தொடங்கி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் வாகனங்கள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டி உள்ளது. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீண்டநேரம் காத்திருப்பு

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறுகையில்,

'திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது. இதை கருத்தில் கொண்டு போக்குவரத்தை வேறு பாதையில் மாற்றும் போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வெளியூர் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகையால் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலிருந்து மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச் சாலை, மன்னார்குடி சாலையில் இருந்து பட்டுக்கோட்டையை சாலை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை அரசு விரைந்து தொடங்க வேண்டும். இதனால் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறைய வாய்ப்பு உள்ளது' என்றார்.


Next Story