புறவழிச்சாலையோரம் குவிந்து கிடக்கும் கழிவுகள்


புறவழிச்சாலையோரம் குவிந்து கிடக்கும் கழிவுகள்
x

தஞ்சை சமுத்திரம் ஏரி அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை சமுத்திரம் ஏரி அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை-விக்கிரவாண்டி சாலை

தஞ்சை-கும்பகோணம்-விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான சாலைகள் குறுகலாகவும், சாலையோரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தஞ்சை-விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் நீளமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழி சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

மேலும் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை-விக்கிரவாண்டி சாலையையும் வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

3 பிரிவுகளாக பணி

சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரை ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 2-வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சை மாரியம்மன்கோவில் பைபாஸ் சாலை வரை 3-வது பிரிவாகவும் பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டிக்கு செல்லும் பயண நேரம் 5 மணி நேரத்தில் செல்வது 3 மணி நேரமாகவும், தஞ்சையில் இருந்து கும்பகோணத்திற்கு 1 மணி நேரத்தில் இருந்து 40 நிமிடமாகவும் பயண நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது

குவிந்து கிடக்கும் குப்பை

அதன்படி தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதி சமுத்திரம் ஏரி அருகே பணிகள் மேற்கொள்ளப்பட்டு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புறவழிச்சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதி குப்பை மேடு போல காட்சி அளிக்கிறது.

இவற்றால் அந்த வழியாக செல்லும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.மேலும், சிலர் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

தொற்று நோய் பரவும் அபாயம்

இந்த மருத்துவ கழிவுகள் சமுத்திரம் ஏரியில் உள்ள தண்ணீருக்குள் கலக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புறவழிச்சாலையோரம் உள்ள குப்பைகள், இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் சாலையோரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story