தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாக மக்கள் புகார்


தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாக மக்கள் புகார்
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை 39-வது வார்டில் தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாக மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை 39-வது வார்டில் தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாக மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

தார்ச்சாலை

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் புதிதாக தார்சாலை போடப்பட்டு வருகிறது. நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 29-வது வார்டு முதல் 41-வது வார்டு வரையிலான 13 வார்டுகளில் 23 சாலை பணிகள் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் போடப்பட்டு வருகிறது. அதன்படி 39-வது வார்டுக்குட்பட்ட தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ராஜராஜசோழன் 1-வது தெருவில் புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் தெருவை நன்றாக சுத்தம் செய்யாமலும், அதிக உயரம் (தடிமன்) இல்லாமலும் தரமற்ற முறையில் தார்ச்சாலை போடுவதாக கூறி நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தார்ச்சாலை போடுவதற்காக வந்திருந்த எந்திரத்தை மறித்து அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்ட பிறகு தார்ச்சாலை போட வேண்டும் என வலியுறுத்தினர்.

சுத்தம் செய்ய வேண்டும்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ராஜராஜசோழன் 2-வது தெருவில் அகலமாகவும், தடிமனாகவும் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் 1-வது தெருவில் போடப்பட்டுள்ள சாலையை எளிதாக பெயர்ந்து வருகிறது. எனவே தெருவை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சாலையை தடிமனாகவும், அகலமாகவும் தரமாகவும் போட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தநிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தார்சாலை பணியை ஆய்வு செய்தனர். அப்போது நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4.70 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை போடப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தான் தார்ச்சாலை போடப்பட்டு வருகிறது. மற்ற திட்டத்தின் கீழ் போடப்பட்ட தார்ச்சாலையை இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. மண்ணை சுத்தப்படுத்தாமல் போடப்பட்ட இடத்தில் மீண்டும் தார்ச்சாலை அமைத்து கொடுக்கப்படும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர்.


Next Story