எல்.எல்.ஆர் உரிமத்துக்கு 'இ-சேவை' மையங்களில் விண்ணப்பிக்கலாம் - புதிய நடைமுறை இன்று முதல் அமல்


எல்.எல்.ஆர் உரிமத்துக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் - புதிய நடைமுறை இன்று முதல் அமல்
x
தினத்தந்தி 13 March 2024 11:30 AM IST (Updated: 13 March 2024 1:44 PM IST)
t-max-icont-min-icon

வாகனங்களை ஓட்டி பழகுவதற்கான எல்.எல்.ஆர் உரிமத்தை பெற இன்று முதல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

வாகனங்களை ஓட்டி பழகுவதற்கான எல்.எல்.ஆர் உரிமத்தை பெற இன்று முதல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது எல்.எல்.ஆர். (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையதள மையங்களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது.

இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

அதனடிப்படையில் முதல்-அமைச்சர் ஆணைப்படியும், போக்குவரத்து துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதும் உள்ள 55 ஆயிரத்துக்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கும் முறை 13-ந்தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக்கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆரை வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (வாகன ஓட்டுநர் உரிமம், (டிரைவிங் லைசென்சு), பர்மிட், உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story