குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தரகம்பட்டி அருகே குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியல்
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மாவத்தூர் ஊராட்சி முத்தகவுண்டம்பட்டி உள்பட 18 கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரெட்டியபட்டியில் உள்ள காவிரி குடிநீர் உந்து நிலையத்தில் உள்ள மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் மின்மோட்டார்கள் பழுது ஏற்பட்டதால் 18 குக்கிராமங்களுக்கும் கடந்த 25 நாட்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மாவத்தூர் ஊராட்சி பொதுமக்கள் நேற்று காவிரி குடிநீர் வழங்ககோரி தரகம்பட்டி அருகே ரெட்டியபட்டியில் உள்ள தரகம்பட்டி-வையம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன், மாவத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதா செந்தில்மோகன், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது காவிரி குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.