கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

தரகம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அலுவலகம் பூட்டியே கிடப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

கரூர்

முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள பாலவிடுதியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சுரேஷ் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இங்கு பட்டா சிட்டா, வாரிசு சான்று போன்ற பல்வேறு தேவைகளுக்காக சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது பணியாற்றி வரும் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் நேற்று மாலை பாலவிடுதி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு காத்திருந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் அலுவலகத்திற்கு உள்ளே சென்றவுடன் திடீரென்று அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களாக பாலவிடுதி கிராம நிர்வாக அலுவலகம் போட்டியே உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டால் முறையான பதில்இல்லை. இதனால் விவசாயம் சார்ந்த தேவைக்கு பட்டா சிட்டா அடங்கல் மற்றும் வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கிராம நிர்வாக அலுவலகம் வந்தால் பூட்டப்பட்டே உள்ளது.

பரபரப்பு

இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகிறோம். நாங்கள் எங்களது சொந்த வேலைகளை விட்டுவிட்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கிராம நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றனர் இதனை கேட்டு அறிந்த தாசில்தார் இதுகுறித்து கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story