எரகுடி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
எரகுடி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
உப்பிலியபுரம்:
ஊராட்சி அலுவலகம் முற்றுகை
உப்பிலியபுரம் ஒன்றியம், எரகுடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, 100 நாள் வேலையை தொடர்ந்து கொடுக்க வலியுறுத்தியும், நிலுவையில் உள் ஐந்து வார சம்பள பாக்கியையும் உடனடியாக வழங்க வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எரகுடி பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் ரெங்கராஜ், கவின், மற்றும் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வருகிற வியாழக்கிழமையில் இருந்து தொடர்ந்து வேலை தரப்படும் என்றும், சம்பள பாக்கியை உடனடியாக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் காத்திருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
*திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட்டின் மகன் தாமஸ்(23). கூலி தொழிலாளியான இவர் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*மணப்பாறை அருகே உள்ள ராயம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர்(38). இவரது மனைவி கஸ்பார் மேரி குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 9-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ராஜசேகர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனத்தை எரித்தவர் கைது
*முசிறியை அடுத்த அட்லாப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசனின் மகன் செல்வம் முருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் அழகேசன் (22), செல்வன் மகன் லோகநாதன் (22), ரங்கசாமி மகன் செந்தில் (31) ஆகியோருக்கும் இடைேய பிரச்சினை இருந்ததாகவும், இதனால் சம்பவத்தன்று மேட்டுப்பட்டி அழிஞ்சு குத்து பள்ளத்தில் இருந்த செல்வம் முருகன் வீட்டிற்கு சென்ற 3 பேரும், அவரிடம் தகராறு செய்து, இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினர். இது குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து அழகேசனை(22) நேற்று கைது செய்தார்.
*மணப்பாறையை அடுத்த இனாம்ரெட்டியபட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (79). இவரது மனைவி பாப்பம்மாள் (75). இவர் நேற்று வீட்டில் காலை உணவு சமைத்தார். அப்போது கியாஸ் சிலிண்டர் குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் பாப்பம்மாள் மற்றும் அங்கு வந்த ரெங்கராஜுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ உடனே அணைந்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.