பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால் அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை


பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால் அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை
x

பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மாநில சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் முறையாக கட்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கால்நடைகளை அவைகளின் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்போடு பராமரிப்பது அவரவரின் கடமை ஆகும். கால்நடைகள் அவ்வாறு முறையாக பராமரிக்கப்படாமல் அவைகள் சாலைகளில் இரவும் பகலும் சுற்றிதிரிவதுடன் சாலைகளிலேயே படுத்து கொள்கின்றன. இதனால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.

எனவே, கால்நடைகளை சாலைகளில் அபாயகரமாக சுற்றவிடும் கால்நடை உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன் படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வட்டத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க தாசில்தார்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கால்நடை பராமிரிப்புத்துறை அலுவலர்கள், பஞ்சாயத்து அலுவலர்களுடன் இணைந்து தணிக்கை செய்து தவறிழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, சாலை பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் கால்நடைகளின் உரிமையாளர் மீது சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story