மான்கறி சமைத்து சாப்பிட்ட 6 பேருக்கு அபராதம்
சிவகிரி அருகே மான் கறி சமைத்து சாப்பிட்ட 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி வட்டார பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை கடத்தி செல்வதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகிரி ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் அசோக்குமார், தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் சுதாகர், பாரதி கண்ணன், அருண்மொழி பிரதீப், செய்யது பாவாசா, வேட்டைத்தடுப்பு காவலர்கள் சரவணன், பாலசுப்பிரமணியன், ஆனந்தன், மாரியப்பன் ஆகியோர் குறிப்பிட்ட வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் சிவகிரி அருகே துரைச்சாமியாபுரம் கிராமம் இந்திரா காலனியைச் சேர்ந்த குருசாமி மகன் கலேஷ் குமார், மஞ்சள் கூப்பன் தெருவை சேர்ந்த அந்தோணி மகன் இமானுவேல் இளவரசன், சின்னமிக்கேல் மகன் சுபாஷ் சந்திர போஸ், சீனிவாசன் கடை தெருவை சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ், தமிழ்ராஜ் மகன் சதீஷ்குமார் பேச்சியப்பன் மகன் சிவக்குமார் ஆகியோரின் வீடுகளில் சமைத்த நிலையில் இருந்த மானின் இறைச்சியை கைப்பற்றினர். பின்னர் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் சமைத்து வைத்திருந்த இறைச்சியையும், சமையலுக்கு பயண்படுத்திய பாத்திரம் ஆகியவற்றையும் கைப்பற்றி சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட வனஅலுவலர் உத்தரவுப்படி 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.