பேனா நினைவு சின்னம் : விரைவில் கட்டுமான பணிகள் தொடங்குகிறது
ஒன்றரை ஆண்டுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்
சென்னை,
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல்மேல் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் இந்த நினைவுச் சின்னத்தை 3 பகுதிகளாக கட்டவும் திட்டமிட்டுள்ளனர். முதலில் கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கப்படுகிறது. இதில் கடல் மீது 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக அமைக்கப்படும்.
அடுத்து பேனா நினைவுச் சின்னம் 30மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். இந்த நினைவுச் சின்னம் அமைக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பல அமைப்புகள் ஆதரவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் முழு அனுமதியும் இப்போது கிடைத்துவிட்டது. இருப்பினும் 15 நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
கட்டுமான பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக்கூடாது. திட்டத்தைச் செயல்படுத்தும்போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லாச் சான்று பெற வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. ஏதேனும் தவறான போலியான தகவல் இருப்பது தெரியவந்தால், அனுமதி வாபஸ் பெறப்படும். இந்த அனுமதியானது தேசிய பசுமை தீர்ப்பாயம் தெற்கு மண்டலத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
பேனா நினைவுச் சின்னத்துக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் இனி அடுத்த கட்டமாக கட்டிட பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடும் பணியில் பொதுப் பணித்துறை ஈடுபட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். நினைவுச் சின்னத்தை வடிவமைக்க சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பிற நிபுணர்களுடன் கலந்தாலோ சிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.