விவசாயிகள் பாடைகட்டி ஊர்வலம்


விவசாயிகள் பாடைகட்டி ஊர்வலம்
x

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி நாகையில் விவசாயிகள் பாடைகட்டி ஊர்வலமாக சென்றனர். மேலும் கண்ணில் கருப்பு துணி கட்டி வயலில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி நாகையில் விவசாயிகள் பாடைகட்டி ஊர்வலமாக சென்றனர். மேலும் கண்ணில் கருப்பு துணி கட்டி வயலில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணியை கட்டி நாகை பெருங்கடம்பனூர் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் செல்லப்பா முன்னிலை வகித்தார்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை உதாசீனப்படுத்தும் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்.

தண்ணீர் இன்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கர்நாடக அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வயலில் நின்று காய்ந்த பயிர்களை கையில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.

பாடைகட்டி ஊர்வலம்

அதேபோல நாகை அவுரி திடலில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடைபெற்றது.

காய்ந்த பயிர்களை பாடைகட்டி மேளதாளத்துடன் நாகை அவுரி திடலில் இருந்து பப்ளிக் ஆபீஸ் சாலையில் ஊர்வலமாக வந்த விவசாயிகள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஒப்பாரி வைத்தனர்

அப்போது விவசாயிகள் ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். காவிரியில் டெல்டா மாவட்டத்திற்கு வழங்கக்கூடிய தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு, பயிர் காப்பீட்டுக்கு இணையாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். குறுவை பயிருக்கான காப்பீடுகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தனபாலன், விவசாய சங்கங்களை சேர்ந்த கக்கரை சுகுமாரன், சேரன், நல்லசாமி உள்பட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story