ஜேடர்பாளையத்தில்இருதரப்பினர் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்கலெக்டர் தலைமையில் நடந்தது
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையத்தில் இருதரப்பினர் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.
அமைதி பேச்சுவார்த்தை
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர், வீ.கரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இரு தரப்பினர்களுக்கான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் ஜேடர்பாளையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் முன்னிலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:-
வடகரையாத்தூர் மேல்முகம் வீ.கரப்பாளையம் பகுதியை சேர்ந்த நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொலை சம்பவத்தை சிலர் தவறாக சித்தரித்ததால் வடகரையாத்தூர், மேல்முகம் கிராமத்தில் குடிசை வீடுகள், கொட்டகை தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடும் நடவடிக்கை
இந்த நிலையில் நேற்று வடகரையாத்தூர், மேல்முகம் கிராமத்தில் சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வேளாண் எந்திரங்கள் மற்றும் வீடு தீ வைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையை சிலர் தவறாக பயன்படுத்தி தேவையற்ற அசம்பாவிதங்களை உருவாக்க நினைக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் கிராமத்தில் அமைதி திரும்ப கிராமங்களை சேர்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும்.
இந்த சம்பவங்கள் குறித்த தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வடகரையாத்தூர் மற்றும் வீ.கரப்பாளையம் கிராம பகுதியை சேர்ந்த இரு தரப்பினரின் கோரிக்கைகளை கலெக்டர் கேட்டறிந்தார். இதில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.