பச்சை தேயிலைக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்


பச்சை தேயிலைக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Oct 2023 8:00 PM (Updated: 21 Oct 2023 8:00 PM)
t-max-icont-min-icon

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

நீலகிரி

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

நஷ்டத்தில் இயங்குகிறது

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பிரிவுக்கு, நீலகிரி மாவட்டம் பாலகொலா மகாலிங்கம் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் ராமன் தலைமையில் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கக்கூடிய பச்சை தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இதனால் இந்த தொழிலை நம்பி வாழும் 82,000 சிறு, குறு தேயிலை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக தேயிலை தோட்டங்களை விற்பனை செய்து விட்டு, பிற மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் இயங்கும் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாக சரியான நிர்வாக திறமையின்மை இல்லாததால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

நிலுவைத்தொகை

குறிப்பாக பாலகொலாவில் உள்ள மகாலிங்க தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகம், கடந்த 6 மாதங்களாக உறுப்பினர்களிடம் கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு கொள்முதல் தொகையை இதுவரை பட்டுவாடா செய்யவில்லை. நிலுவை தொகை ரூ.50 லட்சம் வரை இருக்கும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் இந்திய தேயிலை வாரியம் மாதந்தோறும் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச சராசரி விலையை விட கிலோவுக்கு ரூ.3 குறைவாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மகாலிங்கம் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இந்திய தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் மாதாந்திர சராசரி விலையை எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story