மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தண்ணீர் வசதியும் இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக் கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன்சுருட்டி, ஆலத்திபள்ளம், குண்டவெளி, முத்துசேர்வாமடம், காட்டகரம், சொக்கலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் இங்குள்ள அரசு விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை
இந்தநிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கென்று 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நோயாளிகள் அவதி
ராஜா பெரியசாமி:- ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் 3 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் நோயாளிகள் மாத்திரைகளை சாப்பிட தண்ணீர் வசதி இல்லாததால் அவர்கள் அருகே உள்ள கடைகளுக்கு சென்று மாத்திரைகளை சாப்பிட வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் எந்திரத்தை பொருத்த வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கொடுக்க வேண்டும்.
சுகாதாரமற்ற கழிவறைகள்
அழகேசன்:- ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் நோயாளிகள் இயற்கை உபாதைக்கு செல்ல தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் இங்குள்ள கழிவறைகள் சுகாதாரமற்று காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள்
ராஜ்குமார்:- மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முதியோர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் நோய்வாய்பட்டால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 2½ ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. மேலும், இ.சி.ஜி. கருவி, ரத்த பரிசோதனை செய்யும் கருவி, படுக்கை அறை ஆகியவற்றை கூடுதலாக வழங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.