ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி


ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை

அரசு மருத்துவமனை

ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களின் நலனை கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குடி பேரூராட்சி 2-வது வார்டில் அரசு பொது மருத்துவமனை அமைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை மாவட்டத்தின் 2-வது தலைமை மருத்துவமனையாக விளங்குகிறது.

ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், பனங்குளம், வெட்டன்விடுதி, ஆவணம்-கைக்காட்டி, வெண்ணாவல்குடி, வேங்கிட குளம், வம்பன், திருவரங்குளம், மாங்கோட்டை, செம்பட்டி விடுதி உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் ஆலங்குடி அரசு மருத்துவமனை மூலம் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் இங்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டாக்டர்கள் பற்றாக்குறை

இந்தநிலையில் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 15 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 4 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். மேலும் 5 தூய்மை பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

உயிரிழப்பு அபாயம்

ஆலங்குடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆலங்குடியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கூடுதல் பணி சுமை

ஆலங்குடியை சேர்ந்த வடிவேல்:- ஆலங்குடி அரசு மருத்துவமனை இப்பகுதிக்கு தலைமை மருத்துவமனையாகும். இங்கு போதிய டாக்டர்கள் இல்லை என்று பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தநிலையில் இங்கு பணியாற்றிய டாக்டர் ஒருவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதால் தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் டாக்டர்களுக்கு கூடுதல் பணி சுமையும், நோயாளிகள் சிகிச்சை பெற பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

டெங்கு காய்ச்சல்

வன்னியன்விடுதியை சேர்ந்த முருகன்:- தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு யாரும் சிகிச்சை பெற வருவதில்லை. காரணம் டாக்டர்கள் பற்றாக்குறையால் பல மணி நேரம் மருத்துவமனையில் காத்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இதேபோல் 108 ஆம்புலன்சில் வரும் நோயாளிகள் கூட ஆலங்குடி மருத்துவமனைக்கு செல்லாமல் புதுக்கோட்டை நோக்கி செல்கின்றனர். எனவே தமிழக அரசு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள்

ஆலங்குடியை சேர்ந்த பாஸ்கர்:- ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் நாள்தோறும் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் 3 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். குறைந்த டாக்டர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது முடியாத காரணம். இதனால் நோயாளிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் முதலுதவி செய்வதற்கு கூட டாக்டர்கள் இல்லை. இதேபோல் 5 தூய்மை பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகம் தூய்மை இல்லாமல் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின் வசதிகள் சரிவர இல்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்கள் கூட வேறு மருத்துவமனைக்கு சென்று விட்டனர். எனவே போதிய டாக்டர்களை நியமிக்காவிட்டால் போராட்டம் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

நோயாளிகள் அவதி

ஆலங்குடியை சேர்ந்த சொர்ணகுமார்:- ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே போதிய டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நியமிக்காவிட்டால் கறம்பக்குடி மக்களை போல் நாங்களும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story