2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் நோயாளிகளுக்கான கழிவறைகள்
செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்காக கட்டப்பட்ட கழிவறைகள் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளதால் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செட்டிகுளம் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு வரும் புறநோயாளிகளின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக என 2 கழிவறைகள் கட்டப்பட்டன.
கழிவறைகள் பூட்டியே காணப்படுகிறது
ஆனால் அந்த 2 கழிவறைகளும் தண்ணீர் வசதியில்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே காணப்படுகிறது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் புறநோயாளிகளில் ஆண்கள் திறந்த வெளியில் சிறுநீர், இயற்கை உபாதை கழிக்கின்றனர். பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள 2 கழிவறைகளுக்கும் தண்ணீா் வசதி ஏற்படுத்தி புறநோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.