வேம்பாரில் பத்திரகாளியம்மன் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே சலசலப்பு


வேம்பாரில் பத்திரகாளியம்மன்  கோவில் சுற்றுச்சுவர் கட்டும் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே சலசலப்பு
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேம்பாரில் பத்திரகாளியம்மன் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

வேம்பார்:

விளாத்திகுளம் அருகே கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவில் சுற்றுச்சுவர்

விளாத்திகுளம் அருகே வேம்பாரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் முடிவெடுத்து பணியை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அருகில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தினர் நிலப்பிரச்சினையை சுட்டிக்காட்டி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில், கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அனுமதி அளித்து அதற்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

கட்டுமானத்திற்கு எதிர்ப்பு

இதனைத்தொடர்ந்து நேற்று போலீசார் பாதுகாப்புடன் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கியது. அப்போது அங்கு வந்த கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு நிலவியது. மோதல் ஏற்படும் சூழல்நிலை உருவானதை தொடர்ந்து தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில்போலீசார் குவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் செந்தில்குமார், நகர தலைவர் சிங்கராஜ் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார் மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் இன்று (புதன்கிழமை) வருவாய் துறை சார்பில் பிரச்சினைக்குரிய நிலம் அளவை செய்யப்பட்டு சுமூகமான தீர்வு எட்டப்படும் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வேம்பாரில் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Next Story