கள், பதனீர் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்
பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கள், பதனீர் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கள், பதனீர் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:- விவசாயி சங்க செயலாளர் முகேஷ்:- குடவாசல் திருவீழிமிழலை பகுதியில் உயிரிழந்த கால்நடைகளுக்கு முறையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மாசிலாமணி:- குறுவை பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்துவிட வேண்டும். தூர்வாரும் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். நாகை மாவட்டம் வரை வெண்ணாற்றில் நீரோட்டத்துக்கு தடையாக உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும்.
பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
விவசாயிகள் சங்க தலைவர் தம்புசாமி:- வேளாண்மை பட்ஜெட்டுக்கு முன்னதாக கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையையும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பதனீர், கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்.
விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகி பாலகுமாரன்:- திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பரப்பும் பஞ்சு உற்பத்தியும் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் நூற்பாலை அமைக்க வேண்டும்.
பன்றிகளால் பயிர் சேதம்
விவசாயி குப்புசாமி:- சிறுதானியங்களை பயிரிட அரசு ஊக்குவித்து வரும் நிலையில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை கட்டுப்படுத்த அனைத்துத்துறை அதிகாரிகளிடமும் மனுஅளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பன்றிகளால் உளுந்து, பயறு பயிர்கள் சேதமடைந்து விட்டன.
விவசாயி திருவள்ளுவன்:- திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வளவனாற்றில் புதர்மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றித்தர வேண்டும்.
ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி முருகையன்:- மரைக்காகோரையாறு, வளவனாறு, புதிய பழைய கிளைதாங்கியாறு ஆகியவற்றில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும். விளைநிலம், விவசாயத்தை பாதிக்காத வகையில் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை துறை இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.