பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 26 Jun 2023 1:34 AM IST (Updated: 26 Jun 2023 5:04 PM IST)
t-max-icont-min-icon

மாறநேரி பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது

தஞ்சாவூர்

மாறநேரி பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பசுபதீஸ்வரர் கோவில்

திருக்காட்டுப்பள்ளி அருகே மாறநேரி கிராமத்தில் சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த சிவன் கோவில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் கருங்கற்களால் கட்டப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் மற்றும் பெருமாள் சன்னதி புதிதாக அமைக்கப்பட்டு புதுவர்ணம் பூசப்பட்டது.

குடமுழுக்கு விழாவையொட்டி கோவி்ல் எதிரில் யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 6-ம் கால யாகசாலை பூஜைக்கு பின்னர், யாக சாலையில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் அடங்கிய கடங்களை வேத விற்பன்னர்கள் சுமந்து நாதஸ்வர இசை முழங்க கோவில் வலம் வந்தது.

குடமுழுக்கு

கோவில் வலம் வந்த புனித நீர் அடங்கிய கடங்கள் கோபுரத்தின் மேல் கொண்டு வைக்கப்பட்டது. கோபுரத்தின் மேல் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்குக்கு பின்னர் கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பசுபதீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாறநேரி கிராமத்தினர், கோவில் நிர்வாகிகள், திருப்பணிக்குழுவினர், சிவபக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story