மின்கம்பியில் திடீர் கோளாறு மின்சார ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் தவிப்பு


மின்கம்பியில் திடீர் கோளாறு மின்சார ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் தவிப்பு
x

மின்கம்பியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகம் செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை,

கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கும் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று காலை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் 10 மணியளவில் எழும்பூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் மேல் பகுதியில் உள்ள மின்னழுத்த கம்பியின் 'பேண்டோகிராப்' கருவியில் உள்ள ஒரு பகுதியானது சேதம் அடைந்து உடைந்து கீழே விழுந்தது. மின்சார ரெயில் இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தை சேகரித்து ரெயிலை இயக்குவதற்கு 'பேண்டோகிராப்' கருவி உதவுகிறது. இந்த கருவி சேதம் அடைந்ததால் மின்சார ரெயிலின் இயக்கம் தடைபட்டது. இதனால் உடனடியாக எழும்பூர் ரெயில் நிலையத்திலேயே அந்த மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் 40 நிமிடங்கள் வரை ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாமதமான 4 ரெயில்கள்

இதனிடையே ரெயில் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் மற்ற ரெயில் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடற்கரை நோக்கியும், தாம்பரம் நோக்கியும் சென்று கொண்டிருந்த 4 மின்சார ரெயில்கள் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர் 'பேண்டோகிராப்' கருவி சரி செய்த பின் மின்சார ரெயில் புறப்பட்டு, கடற்கரையை சென்றடைந்தது.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்வோர் சிரமப்பட்டனர். ஓட்டமும், நடையுமாக ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறி பஸ்களிலும், ஆட்டோக்களிலும் அலுவலகத்திற்கு சென்றனர்.


Next Story