பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
நீடாமங்கலத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் மற்றும் கோடைகாலத்தையொட்டி தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் மற்றும் கோடைகாலத்தையொட்டி தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் நிலையம் இல்லை
நீடாமங்கலம் தாலுகாவின் தலைநகரம் ஆகும். இங்கு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளன. நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் நாள்தோறும் கல்வி, மருத்துவம், வர்த்தகம், தனியார் மற்றும் அரசுத்துறை பணிகள் போன்றவற்றிற்காக தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
மேற்கண்ட ஊர்களில் இருந்தும் பல்வேறு துறை பணிகளுக்காக நாள்தோறும் பலர் இங்கு வந்து செல்கின்றனர். நீடாமங்கலத்தில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்பவர்களும், மற்ற ஊர்களில் இருந்து இங்கு வந்து செல்பவர்கள் பஸ் நிலையம் இல்லாத காரணத்தால் நீடாமங்கலம் ரெயில்நிலையம் அருகிலும், மேலராஜவீதி பகுதியிலும், தஞ்சை சாலை பகுதிகளிலும் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து பஸ்சில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
இவ்வாறு பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் இல்லை. இதனால் வெயில் அடிக்கும் போதும், மழை பெய்யும் போதும் பயணிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மேற்கண்ட இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைத்துதர வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.
தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் பயணிகள் நிழற்குடை இல்லாததால் அவதி பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் பந்தல்
கோடைக்காலத்தையொட்டி பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்த பகுதிகளில் நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.