பயணிகள் நிழற்கூடம், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்


பயணிகள் நிழற்கூடம், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்
x

ஓச்சேரியில் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், பஸ் நிலையத்தில் நிழற்கூடம், கழிப்பிடம், அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.சங்கீதா ஜெயகாந்தன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றயத்தில் ஓச்சேரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஓச்சேரி, அருந்ததிபாளையம், ஓச்சேரி காலனி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த ஜெ.சங்கீதா ஜெயகாந்தன் உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டு உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

வளர்ச்சிப் பணிகள்

ஓச்சேரி காலனி, குப்புசாமி நாயக்கன் தெருவில் தலா ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தில் கிடைமட்ட உறிஞ்சிகுழி, ஓச்சேரி காலனியில் ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், ஓச்சேரியில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்தில் குடிநீர் குழாய், அருந்ததிபாளையத்தில் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை, ஓச்சேரியில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தில் 4 மழைநீர் சேகரிப்பு தொட்டி, 19 பயனாளிகளுக்கு தலா 12 ஆயிரம் மதிப்பில் தனி நபர் கழிப்பிடம், எம்.எல்.ஏ தொகுதி நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் குடிநீர் பைப்லைன் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.6 லட்சத்து 63 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், குட்டி பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய், ஓச்சேரி காலனியில் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஓச்சேரியில் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம், ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தில் புதிய மோட்டார் பைப்லைன், ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் பைப்லைன், எஸ்.ஆர்.ஆர். நகரில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தில் பைப் லைன், அதே பகுதியில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் பைப்லைன் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 158 பயனாளிகளுக்கு தனிநபர் உறிஞ்சி குழி வழங்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது.

குடிசையில்லா ஊராட்சியாக...

மேலும் ஓச்சேரி ஊராட்சியில் புதிதாக சமுதாய கூடம், உடற்பயிற்சி கூடம், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், அனைத்து தெருக்களுக்கும் சிமெண்டு சாலை, விளையாட்டு மைதானம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கோரிக்கை வைத்து உள்ளேன். ஓச்சேரி ஊராட்சியை குடிசையில்லா ஊராட்சியாக மாற்ற 96 பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நான் தினமும் வார்டு பகுதிக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அதை சரிசெய்து கொடுத்து வருகிறேன். மேலும் தினமும் ஊராட்சி மன்ற அலுலகத்திற்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு சரிசெய்து கொடுத்து வருகிறேன். மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதியில் புதிய குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த மின் விளக்குகள் உடனுக்குடன் சரிசெய்து அந்த பகுதியில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது.

நிழற்கூடம்

தினமும் ஓச்சேரி வழியாக ஆயிரக்கணக்கான பஸ்கள் சென்னை, வேலூர், திருப்பத்தூர், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வரும் ஓச்சேரி பஸ் நிலையத்தில் நிழற்கூடம், கழிப்பறை வசதிகள் கிடையாது. இதனால் பயணிகள் ரோடு ஓரம் நின்று பஸ்சில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே ஓச்சேரி பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக இருக்கை வசதிகளுடன் கூடிய நிழற்கூடம், கழிப்பிடம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உடனடியாக கட்டி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளேன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓச்சேரி ஊராட்சியை முதன்மையான ஊராட்சியாக மாற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, துணைத்தலைவர் முனியம்மாள் கணேசன், மாவட்ட கவுன்சிலர் என்.சக்தி, ஒன்றியகவுன்சிலர் கே.தீபா கார்த்திகேயன் ஆகியோரின் ஒத்துழைப்போடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.பழனி, வார்டு உறுப்பினர்கள் இ.செல்வி எல்லப்பன், ஏ.கோட்டீஸ்வரி அர்ஜூனன், ஏ.செல்வராஜன், கே.பரிமளா குமார், என்.ஷெரீன்பானு நசீர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவேன்.

இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.சங்கீதா ஜெயகாந்தன் தெரிவித்தார்.


Next Story