ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்


ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்
x
தினத்தந்தி 13 July 2023 12:45 AM IST (Updated: 13 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அபாய நிலையில் பயணிகள் நிழலகம்

திருவாரூர் மாவட்டம் செருகுடி ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள பயணிகள் நிழலகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நிழலகம் கடந்த 10 ஆண்டுகளாக சேதம் அடைந்து காணப்படுகிறது. நிழலக கட்டிடத்தில் விரிசல் விழுந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.

நிழலகத்தை புத்தூர், ஈசனவாசல், கருப்பூர், பழையவலம், தென்பாதி, எழுமுக்கால், வாய்க்கால்மேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இங்கிருந்து தான் பஸ் ஏறி செல்கிறார்கள்.

நாகூருக்கு பஸ்...

இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழலகத்தின் முன்பு விறகுகள் கொட்டப்பட்டு இருப்பதும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி, வைப்பூர், நரிமணம் வழியாக நாகூருக்கு பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பதால் இந்த வழித்தடத்தில் உள்ள நிழலகங்களில் பயணிகள் காத்திருக்க வேண்டி உள்ளது.

நடவடிக்கை இல்லை

இந்த நிலையில் புத்தூர் பயணிகள் நிழலகம் மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் நிழலகத்தை பயன்படுத்த தயக்கம் காட்டுகிறார்கள். மழை நேரங்களில் பயணிகள் நிழலகத்தில் ஒதுங்கி கூட நிற்க முடியவில்லை என அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'சேதம் அடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டித் தரக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்கு கூட இந்த பஸ் நிறுத்தத்தில் நிற்க முடியாத நிலை உள்ளது. பஸ்சுக்காக சாலையோரம் காத்திருக்கும்போது இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே பயணிகள் நிழலகத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பயணிகள் நிழலகம் கட்டித்தர வேண்டும்' என்றனர்.


Next Story