செங்கோட்டை -நெல்லை ரெயில் நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்- பயணிகள் வலியுறுத்தல்


செங்கோட்டை -நெல்லை ரெயில் நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்-  பயணிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை-நெல்லை- திருச்செந்தூர் இடையே ரெயில் நிலையங்களில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்

தென்காசி

திருச்செந்தூர் -நெல்லை -செங்கோட்டை இடையே ரெயில் நிலையங்களில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருச்செந்தூர் -செங்கோட்டை

திருச்செந்தூர் - நெல்லை - செங்கோட்டை ரெயில் வழித்தடங்களில் உள்ள நடைமேடைகளின் எண்ணிக்கை மற்றும் நீளம் குறித்து பாவூர்சத்திரம் சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

அதில், செங்கோட்டை ரெயில் நிலையத்தில் 580 மீட்டர் நீளம் கொண்ட 4 நடைமேடைகளும், 690 மீட்டர் நீளத்தில் பிளாட்பாரம் இல்லாமல் ரெயிலை நிறுத்தி வைக்கும் 'ஸ்டேபிளிங் லைன்' மற்றும் 102 மீட்டர் நீளத்தில் முக்கிய பிரமுகர்களின் பெட்டியை நிறுத்தி வைக்கும் நடைமேடையும் உள்ளது. தென்காசியில் 540 மீட்டர் நீளமுடைய 3 நடைமேடைகளும், 507 மீட்டர் நீளமுடைய ஒரு நடைமேடையும் உள்ளது.

நெல்லை சந்திப்பில் அதிகபட்ச பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பயணிகள் நடைமேடைகள், 2 சரக்கு இறங்கு தளம், ஒரு முக்கிய பிரமுகர் பெட்டி நிறுத்துமிடம், 5 பிளாட்பாரம் இல்லாமல் ரெயிலை நிறுத்தி வைக்கும் 'ஸ்டேபிளிங் லைன்' மற்றும் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு தண்டவாளங்கள் அமைந்துள்ளன.

திருச்செந்தூரில் 550 மீட்டர் நீளத்தில் ஒரு நடைமேடை, 340 மீட்டர் நீளத்தில் இருநடை மேடைகள், 45 மீட்டர் நீளத்தில் ஒரு விருந்தினர் பெட்டி நிறுத்துமிடம் உள்ளது.

நடைமேடைகள் நீட்டிப்பு

நெல்லை -திருச்செந்தூர் வழித்தடத்தில் பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, தாதன்குளம் ஆகிய ரெயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்கும் திட்டம் உள்ளது. நெல்லை -தென்காசி வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்கும் திட்டம் இல்லை.

இவ்வாறு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

540 மீட்டர் நடைமேடை தேவை

இதுகுறித்து பாண்டியராஜா கூறியதாவது:-

24 ஐ.சி.எப் பெட்டிகள் மற்றும் 22 எல்.எச்.பி. பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை நிறுத்துவதற்கு 540 மீட்டர் நீளம் கொண்ட நடைமேடை தேவை. செங்கோட்டை, தென்காசி, நெல்லை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் மட்டுமே 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது.

இந்த மொத்த ரெயில் வழித்தடங்களின் நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்களை இயக்க முடியும்.

தற்போது நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில், அதிகபட்சமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 18 பெட்டிகளுடனும், நெல்லை - தென்காசி வழித்தடத்தில் தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில்கள் முறையே 15, 16 பெட்டிகளுடனும் தற்போது இயங்கி வருகின்றன. செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் முக்கிய கிராசிங் நிலையங்களான ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நடைமேடைகளின் நீளத்தை 540 மீட்டர் வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும்.

ஏற்கனவே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூர் - நெல்லை - தென்காசி வழித்தடத்தில் ரெயில் நிலையங்களில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story