பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், அதே திட்டத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. ஒரே துறையில் ஒரே திட்டத்தில் பணியாற்றுபவர்களில் ஒரு தரப்பினருக்கு ஊதிய உயர்வு வழங்கி விட்டு, அத்திட்டத்திற்கு அடித்தளமாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை மறுப்பது நியாயமற்றது.
தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி விலகி விட்ட நிலையில், சுமார் 12,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதே ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் அலுவலகப் பணியாளர்களும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் 15% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து அநீதி மட்டும் தான் இழைக்கப்பட்டு வருகிறது. பகுதி நேர சிறப்பாசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது; அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம்; ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான் அவர்கள் இப்பணியில் சேர்ந்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களுக்கு இப்போது ரூ.40,000 ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவதால் ரூ.10,000 மட்டுமே கிடைக்கிறது.
சிறப்பாசிரியர்களுக்கான மாத ஊதியம் ரூ.10,000 என்பது கூட உடனடியாக கிடைத்துவிடவில்லை. கடந்த காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலை அடுத்து, அவர்களின் ஊதியம் 2014 ஆம் ஆண்டில் ரூ.7,000 ஆகவும், பின்னர் ரூ.7,700 ஆகவும் உயர்த்தப் பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின் ஊதியம் உயர்த்தப்படவில்லை.
அதேபோல், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று கடந்த 2017 மற்றும் 2019- ஆம் ஆண்டுகளில் அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் அறிவிப்பாகவே நின்று விட்டது தான் மிகப்பெரிய வேதனையாகும். பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளித்து வருகிறது.
பணிநிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். 3 நாட்களுக்கும் மேலாக அவர்களின் போராட்டம் நீடித்த நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு கூட அரசு முன்வரவில்லை. போராட்டக்குழுவினரை பள்ளிக்கல்வி அமைச்சரும், செயலாளரும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதன்பின் 10 மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஒருவரை பணி நிலைப்பு செய்ய என்னென்ன தகுதிகள் தேவையோ, நீதிமன்றங்கள் என்னென்ன கூறுகளை எதிர்பார்க்கின்றனவோ அவை அனைத்தும் பகுதி நேர சிறப்பாசிரியர்களிடம் உள்ளன. இவர்கள் அனைவரும் தகுதி மற்றும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளனர். அதனால், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது.
எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை இடைக்கால நிவாரணமாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.