நாடாளுமன்ற தேர்தல்; அ.தி.மு.க-வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ. 20 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரமும் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.