மனித கடத்தலுக்கு எதிரான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் - கனிமொழி


மனித கடத்தலுக்கு எதிரான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் - கனிமொழி
x

மனித கடத்தலுக்கு எதிரான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

மனித கடத்தல் விழிப்புணர்வு

சென்னை ராணி மேரி கல்லூரியில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து பேசியதாவது:-

சட்ட மசோதா

மனித கடத்தல் இல்லை என்ற தவறான புரிதலுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் மனித கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கனடா, மெக்சிகோ, சீனா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். உலகம் முழுவதும் மனித கடத்தல் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்டால்தான் பிரச்சினைக்கு சரியாக தீர்வுகாண முடியும்.

குறிப்பாக மனித உறுப்புகள் திருட்டு, பாலியல் தொந்தரவு உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்த மனித கடத்தல் நடக்கிறது. வளர்ந்த நாடுகளிலும் கொத்தடிமை முறை இருக்கத்தான் செய்கிறது. மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு இருந்தபோதிலும் வலுவான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் உள்ளது.

எனவே அதனை நிறைவேற்றுவதற்காக காத்திருப்பதால் விரைவில் அதனை நிறைவேற்ற வேண்டும். குழந்தைகள் கொத்தடிமை முறைகளை பார்த்தால் அதுகுறித்து உரிய அலுவலகங்களில் மாணவிகள் புகார் செய்யலாம். அதற்கான விழிப்புணர்வு அவசியம் தேவை. அதுவே இந்த சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிச்சயம் இல்லை

நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசும் போது, 'சமூக வலைதளங்களில் மாணவிகள் முழுமையாக மூழ்கிவிடாமல் சரியான நேர திட்டமிடலுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். செய்திகள், நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பாருங்கள். மாறாக பெண்களை அடிமைகளாக சித்தரிக்கும் டி.வி. நாடகங்களை தவிர்த்துவிடுங்கள்' என்றார்.

இதில் துறை இயக்குனர் ரத்னா, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த குறள் அமுதன், பச்சையம்மாள், தேவநேயன் உள்ளிட்டோர் பேசினர். விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. முன்னதாக கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். துறை இணை இயக்குனர் கண்மணி நன்றி கூறினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர், பிரதமரின் இணக்கத்தினால் வரும் காலங்களில் 2 கட்சிகளும் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா? என்று கனிமொழியிடம், நிருபர்கள் கேட்டதற்கு, 'நிச்சயம் இல்லை' என்று பதில் அளித்தார்.


Next Story