பொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


பொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
x

பொதுமக்களுக்கு மன நிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் அனைத்தும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் மரக்கன்றுகள், செடிகள் நடுதல், புல்வெளிகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு பூங்காவிலும் 50 முதல் 100 எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் நாட்டு மரக்கன்றுகளை நடுதல், அனைத்து மரங்களிலும், சுவர்களிலும் பச்சை, மஞ்சள் நிறங்களில் வர்ணம் பூசுதல், விளையாட்டு உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கும் வகையில் குறைபாடுகளை சரிசெய்தல், பொதுமக்கள் அதிகம் வரும் பூங்காக்களில் குழந்தைகளுக்கான பல்வகை விளையாட்டு சாதனங்களை உயர் தரத்தில் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பூங்காக்களில் உள்ள இருக்கைகள் சீரமைக்கப்படுவதோடு, கூடுதலாக இருக்கைகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் நடைபயிற்சி பாதைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள நடைபாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சீரமைத்தல், மின்விளக்குகளை சரிசெய்து பூங்காவில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒளிரச்செய்தல், பூங்காவின் நுழைவு வாயிலில் அழகிய நிறத்தில் வர்ணம் பூசுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருக்கைகள், நடைபாதைகள் உள்ளிட்ட இடங்களிலும் அழகிய வர்ணம் பூசிடவும், ஒவ்வொரு பூங்காவிலும் உள்ள கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதையும், தண்ணீர் வசதி இருப்பதையும் உறுதி செய்திடவும், பூங்கா மேம்பாட்டுப்பணிகளை கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூங்காவுக்கு வருகைதரும் பொதுமக்கள் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் பெறுகின்ற வகையில் பூங்கா பசுமையாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story