7 ரெயில் நிலையங்களில் மீண்டும் வாகன நிறுத்தகம் - தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்


7 ரெயில் நிலையங்களில் மீண்டும் வாகன நிறுத்தகம் - தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்
x

கலங்கரை விளக்கம், மீனம்பாக்கம் உள்பட 7 ரெயில் நிலையங்களில் மீண்டும் வாகன நிறுத்தகம் அமைக்க ஒப்பந்ததார்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில் சேவைகளை நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் நலன் கருதி, வாகன நிறுத்தும் வசதி டெண்டர் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களின் வாகன நிறுத்தக ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. இதனால், தெற்கு ரெயில்வேயின் தொடர் நடவடிக்கைகள் மூலமாக படிப்படியாக வாகன நிறுத்தும் இடங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கலங்கரை விளக்கம், முண்டக்கண்ணி அம்மன் கோவில், மீனம்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, அரக்கோணம், திண்டிவனம் (ஜி.எஸ்.டி. சாலை பக்கம்), மதுராந்தகம் ஆகிய 7 ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதிக்காக ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பயணிகளின் வருகை அதிகமாக உள்ள ரெயில் நிலையங்களில் படிப்படியாக வாகன நிறுத்த வசதி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கலங்கரை விளக்கம், முண்டக்கண்ணி அம்மன் கோவில், மீனம்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, அரக்கோணம், திண்டிவனம், மதுராந்தகம் ஆகிய 7 ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி மீண்டும் கொண்டுவர ஒப்பந்தாரர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, ஒப்பந்தாரர்களை நியமனம் செய்து 7 ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இதேபோல, ஏற்கனவே வாகன நிறுத்த வசதி இருந்து, ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்யாமல் இருக்கும் ரெயில் நிலையங்களையும் தேர்வு செய்து புதிய ஒப்பந்ததாரர்களை நியமித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story