கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பெற்றோர் முற்றுகை போராட்டம்
ராமேசுவரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி கோவில் அலுவலகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி கோவில் அலுவலகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
14 ஆசிரியர்கள் காலி பணியிடம்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் சார்பில் துளசிபாபா மடம் தெருவில் ஸ்ரீபருவதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 968 மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 ஆசிரியர்களே பாடம் கற்று கொடுத்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் முதுகலை ஆசிரியர் 2 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 7 பேர், இசை ஆசிரியர் ஒருவர் ஆகிய 14 ஆசிரியர்கள் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. காவலர் பணியிடம் ஒன்றும் காலியாக உள்ளது.
16 ஆசிரியர்கள் மட்டுமே 968 மாணவிகளுக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவிகளால் பாடத்தை முழுமையாக கற்று கொள்ள முடியாத நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவிகள் பாடம் கற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.
பெற்றோர் முற்றுகை
இந்நிலையில் காலியான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண்இளங்கோ, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் எம்பி தில்லை பாக்கியம், நகராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் தில்லை புஷ்பம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் ராமநாதசுவாமி கோவில் அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த பள்ளிக்கு தாளாளராக கோவில் துணை ஆணையர் மாரியப்பன் உள்ளார். இதனால் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட துணை ஆணையர் மாரியப்பன் இதுகுறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதன் பேரில் பெற்றோர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் போது கோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.