ஆசிரியர்-மாணவர் இடையே முன்பு போல இப்போது நல்லுறவு இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி


ஆசிரியர்-மாணவர் இடையே முன்பு போல இப்போது நல்லுறவு இல்லை  - கவர்னர் ஆர்.என்.ரவி
x

ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது நல்லதுக்குதான் என்பதை பெற்றோர் புரிய மறுக்கிறார்கள் என்றும், ஆசிரியர்-மாணவர் இடையே முன்பு போல இப்போது நல்லுறவு இல்லை என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.

ஆசிரியர்கள் கவுரவிப்பு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில், கவர்னரின் 'எண்ணித் துணிக' பகுதியின் 9-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், ஆசிரியர்கள், மூத்த கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். தேசிய மற்றும் மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற 24 பேருக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகை ஜானகி உள்பட முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள்.

கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

நெருக்கடி தருவது ஏன்?

சிறுவயதில் மாணவனாக இருக்கும்போது எனது ஆசிரியர் குளிப்பதற்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து கொடுத்தேன். ஆசிரியர்-மாணவர் இடையேயான உறவு அற்புதமானது. ஆசிரியர் உறங்கும்போது அவருடைய கால்களை நீவி விடுவேன். அவர்களை குரு என்று அழைத்தோம். அதுதான் நமது பண்பாடு. மாணவர்களின் பெற்றோரோ, பாதுகாவலர்களோ யாரும் அவர்களிடம் கேள்வி கேட்கவேமுடியாது.

ஆனால் தற்போதைய நிலை மோசமாக மாறியிருக்கிறது. ஆசிரியர்களுக்கு பெற்றோரும், பாதுகாவலர்களும் நெருக்கடியை தருகிறார்கள். ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான உறவு இணக்கமானதாக இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

நல்லதுக்குதான்

அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

கேள்வி:- மாணவர்-ஆசிரியர் இடையே இப்போது இடைவெளி இருக்கிறதே?

பதில்:- இந்த இடைவெளி கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போட்டிக்காக தயார் செய்யும் மனநிலையிலேயே அணுகுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர்களை நம்புவது கிடையாது. முன்பு ஆசிரியர்கள், குழந்தைகளை தண்டித்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்தினார்கள்.

ஆனால் தற்போது மாணவர்களை தண்டிக்க சட்டத்தில் கூட இடம் கிடையாது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிப்பது அவர்களின் நல்லதுக்குதான் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளும் சூழல் தற்போது இல்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story