அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்; மாணவிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்; மாணவிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x

ஆர்கே.பேட்டை அருகே மாணவிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு சில மாணவர்களால் தொல்லை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது மாணவிகளின் பாதுகாப்பு கருதி தங்களது பிள்ளைகளுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் அல்லது அதே கிராமத்தில் பஸ் நிலையம் அருகே உள்ள பழைய பள்ளி கட்டிடத்தில் மாணவிகளுக்கு தனியாக பள்ளி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தகவல் கிடைத்ததும் ஆர்.கே. பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் தங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் அதை தங்கள் மேலதிகாரிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அதற்கு பெற்றோர்கள் உடன்படவில்லை என தெரிகிறது. பின்னர் மாலையில் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story