மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழா


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழா
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று பரணி கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று பரணி கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பரணி கொடை விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை, நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.

மாலையில் தங்கரதம் உலா, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நேற்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.

வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திரளி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

வலிய படுக்கை பூஜை நடந்த போது கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தால் சரண கோஷம் எழுப்பினர். இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story