பரணி தீபம், மகா தீபம் காண இணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு - நாளை முதல் வெளியீடு
கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த அனுமதி சீட்டுகள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேஸ்வரர் கோவில் இணையதளம் வழியாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.
கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி.எண் குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் செல்போன் எண்ணிற்கு வரும்.
கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2 தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. இணையதளம் வழியாக கட்டணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகை தர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்
பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக 1800 425 3657 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுலாம். கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை இணையதளம் மூலம் செலுத்தலாம்.
மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குடத்திற்கான காணிக்கை கட்டண சீட்டுகள் ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.