பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.2 ஆயிரம் உயர்வு
பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.2 ஆயிரம் உயர்வு
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. இந்த மரவள்ளிக்கிழங்குகள் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
இந்த நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் விலை உயர்வால் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.