பரமக்குடி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
பரமக்குடி பள்ளி மாணவியை சீரழித்து, சிதைத்த குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை,
பரமக்குடி பள்ளி மாணவியை சீரழித்து, சிதைத்த குற்றவாளிகள் சட்டத்தின் சந்து, பொந்துகளில் தப்பித்துவிடாமல், கடுமையாக தண்டிக்கப்படும் வகையில் வழக்கை உறுதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் கொடூரமானது. இந்த இரக்கமற்ற மிருகச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி அரசியல் கட்சியின் பிரமுகர், உள்ளாட்சி பிரதிநிநி என்ற அடையாளத்துடனும், பணத்திமிருடன் நடந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு மாத காலம் ஒரு சிறுமி சித்திரவதை செய்யப்பட்டதில் இரண்டு பெண்களும் உடன் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி, சமூக ஒழுக்கம் சீரழிந்து வருவதன் அடையாளமாகும்.
எதுவாகிலும் பரமக்குடி பள்ளி மாணவியை சீரழித்து, சிதைத்த குற்றவாளிகள் சட்டத்தின் சந்து, பொந்துகளில் தப்பித்துவிடாமல், கடுமையாக தண்டிக்கப்படும் வகையில் வழக்கை உறுதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என வலியுறுத்துவதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான உதவிகளை வழங்கி ஆதரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.