பாபநாசத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்


பாபநாசத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
x

5 ஊராட்சிகளை இணைத்து பாபநாசத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

5 ஊராட்சிகளை இணைத்து பாபநாசத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பாபநாசம் பேரூராட்சிக்கு அருகில் உள்ள கோபுராஜபுரம், திருவையாத்துக்குடி, ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம் ஆகிய 5 ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசை கேட்டுக்கொள்வது.

பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்கா அமைப்பது. ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பொதுநிதி பணிகள் மேற்கொள்வது. ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்ட பணிகள் மேற்கொள்வது. ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் மேற்கொள்வது என மொத்தம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது.

படித்துறை

பாபநாசம் புதிய பஸ் நிலையத்தின் தென்கிழக்கு பகுதியில் இருந்து ரெயில்வே சாலைக்கு பாதை அமைக்க தென்னக ரெயில்வேயிடம் அனுமதி கேட்பது. பாபநாசம் வடக்கு வீதி எரிவாயு தகன மேடைக்கு பின்புறம் படித்துறை கட்டுவதற்கு பொதுப்பணித்துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், துரைமுருகன், பிரகாஷ், ஜாபர் அலி, கீர்த்திவாசன், பாலகிருஷ்ணன், தேன்மொழி, முத்துமேரி, புஷ்பா, சமீரா பர்வீன், விஜயா, கோட்டையம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story