ரூ.230 கோடியில் கட்டப்படும் பன்னோக்கு மருத்துவமனை: முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி அறிவித்தார். அதன்படி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை கட்டிட கட்டமைப்பாக இந்த மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மழைநீர் வடிகால் பணிகள்
அதனைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 5 பர்லாங் சாலை, பிள்ளையார் கோவில் தெரு, செங்கேணி அம்மன் கோவில் தெரு, சிட்டி லிங்க் சாலை, நேதாஜி ரோடு மற்றும் வேளச்சேரி பிரதான சாலை ஆகிய இடங்களில் ரூ.16.44 கோடி மதிப்பில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இதில் முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர் ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 157-வது வார்டில் உள்ள ஆற்காடு சாலையில் ரூ.27.4 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தர கட்டுப்பாட்டு வழிமுறைகள்
சாலை பணிகள் நடைபெறும்போது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், பாதுகாப்பான முறையில் தடுப்புகளை அமைத்து பணிகளை மேற்கொள்ளவும், சாலைகள் அமைக்கும்போது தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து சாலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் இறையன்பு, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.