கஞ்சா வைத்திருந்ததாக பானிபூரி கடைக்கு 'சீல்'-உரிமையாளர் கைது
குடியாத்தத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பானிபூரி கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பானிபூரி கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பானிபூரி கடை
குடியாத்தம் டவுன் நான்குமுனை சந்திப்பு அருகே பலமநேர் ரோடு பகுதியில் பள்ளிகொண்டா காமராஜர் நகரை சேர்ந்த அஜித்குமார் (வயது 25) என்பவர் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கஞ்சா விற்பதாக வந்த தகவலின்பேரில் சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், ஏட்டுகள் மோசஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் அந்த கடையில் சோதனையிட சென்றனர். அப்போது கடை பூட்டப்பட்டிருந்தது.
பறிமுதல்
கடை உரிமையாளரை வரவழைத்து கடையை திறந்து பார்த்தபோது அதில் 15 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. உடனடியாக பானிபூரி கடை உரிமையாளர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் உத்தரவின் பேரில் போலீசார் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதன் ஆகியோர் பானிபூரி கடைக்கு 'சீல்' வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ''இந்த பானிபூரி கடையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. அதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே இங்கு சோதனை நடைபெற்று கஞ்சா கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது'' என்றனர்.
விசாரணை
அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட அஜித்குமாரின் உறவினர்கள் தெரிவிக்கையில், ''பானிபூரி கடை வைத்து சில மாதங்கள் மட்டுமே ஆகி உள்ளது கடை நன்றாக விற்பனை ஆவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக கஞ்சா பொட்டலங்களை கடைக்குள் போட்டுவிட்டு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்'' என கூறினார்கள் இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.