டிக்கெட் கவுண்ட்டர் கண்ணாடியை உடைத்த பயணியால் பரபரப்பு
நாசரேத் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் கண்ணாடியை பயணி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாசரேத்:
திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில் (வண்டி எண்:16732) நேற்று முன்தினம் மதியம் 12.20 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. தொடர் விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் இந்த ரெயிலில் பயணித்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாசரேத்துக்கு மதியம் 12.45 மணிக்கு வந்த ரெயில் சிறிதுநேரத்தில் புறப்பட்டது. அப்போது ரெயிலில் பயணிப்பதற்காக அதிகமானோர் டிக்கெட் எடுத்து காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ரெயிலில் ஏற முடியவில்லை. எனவே அவர்கள் தங்களது டிக்கெட்டை ரெயில் நிலைய கவுண்ட்டரில் திருப்பி கொடுத்து பணத்தை தருமாறு கேட்டனர்.
பயணி ஆத்திரம்
அப்போது ரெயில் நிலைய அலுவலரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கிருந்த பயணி ஒருவர் ஆத்திரத்தில் டிக்கெட் கவுண்ட்டர் கண்ணாடியை ஓங்கி அறைந்ததில் உடைந்து நொறுங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ''தொடர் விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் திருச்செந்தூருக்கு கூடுதல் ரெயில் இயக்க வேண்டும். திருச்செந்தூர்-பாலக்காடு ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்'' என்றனர்.