மாரியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா


மாரியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா
x

சிவகாசி, திருத்தங்கலில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி, திருத்தங்கலில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

பங்குனி பொங்கல்

சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் 8-ம் நாள் திருவிழாவின் போது பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

நேற்று 9-வது நாள் திருவிழாவின் போது கயிறு குத்தும் நிகழ்ச்சியும், அலகுகுத்தி வந்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சாமி தரிசனம் செய்ய வந்த பெரும்பாலான பக்தர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோடைக்கால நோய்கள்

கோவில் முன்பு வேப்பிலை கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் படுத்து உருண்டனர். இவ்வாறு உருண்டு கொடுப்பதன் மூலம் கோடைக்கால நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் மற்றும் பழரசங்கள் வினியோகம் செய்யப்பட்டது. பங்குனி பொங்கலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருத்தங்கல்

அதேபோல் திருத்தங்கலில் 8 சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் 76-ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ம் நாள் திருவிழாவான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் பூச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்தங்கலை சேர்ந்த பக்தர் ஒருவர் 9 அடி நீள அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

நாளை காலை பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. 13-ந்தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story